சினிமா செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை - இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சூர்யாவுடன் திரிஷா இடம்பெற்ற ‘கருப்பு’ படத்தின்புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் சூர்யாவின் ‘கருப்பு’ பட டிரெய்லர் வெளியானது.

சூர்யாவுடன் திரிஷா இடம்பெற்ற ‘கருப்பு’ படத்தின் ‘வெரப்பா’ பாடல் இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவித்திருந்தார். ‘கருப்பு’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘வீரபத்ருடு’ பட டிரெய்லர் நேற்று வெளியானது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற ‘கருப்பு’ பட தெலுங்கு பதிப்பு ‘வீரபத்ருடு’ பட விழாவில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி விஜய் குறித்து பேசியுள்ளார்.

இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி “இரண்டு ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது; யாரும் அவரை நம்பவில்லை; பலரும் அவர் மீது எதிர்மறை கருத்துக்களை பரப்பினர்; ஆனால் அந்த மனிதர் தன்னை நம்பினார்; அவர் சிந்தனைகளுடனும், கனவுகளுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் விடாமுயற்சியுடன் இருந்தார்; இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார்; தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர், ஜோசப் விஜய் அவர்கள்; இரண்டு ஆண்டுகள் முன் அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை; ஆனால், அவரால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது; அந்த நம்பிக்கை கோடிக்கணக்கான வாக்குகளாக மாறியது; மக்கள் ஒருவரை நம்பும்போது அது பெரிய ஆற்றலாக மாறும்” என்று பேசியுள்ளார்.