சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படம் ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் திட்டமிட்ட தேதிகளில் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்தனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தமிழில் 'ஏ' சான்றிதழ் கிடைக்கப்பெற்றதாகவும், இப்படத்தை இந்த மாதம் 16 அல்லது 23 ஆகிய தேதிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிற மொழிகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிய சுமார் ஒரு வாரம் ஆகலாம் என்றும், அதன் பின்னரே படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது.
எனினும், இதுகுறித்து படக்குழு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, சென்சார் சான்றிதழ் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.