சினிமா செய்திகள்

"யார் ஹீரோ? என்பதை இயக்குனரைத்தான் கேட்க வேண்டும்" - அனிருத் ரவிச்சந்தர்

சமூக வலைத்தளங்களிலும் யார் இந்த படத்தின் ஹீரோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

சென்னை,

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். 47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் (KHxRK) புரோமோ வீடியோ வெளியானது. இந்த வீடியோவில், கமலும் ரஜினியும் இணைந்து இயக்குனர் நெல்சனிடம் யார் ஹீரோ என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் யார் இந்த படத்தின் ஹீரோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கூறுகையில், "இது மிகவும் ஸ்பெஷலான தருணம். இரண்டு ஜாம்பவான்களும் 47 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து வருகிறார்கள். அது என் வயதை விட அதிகம். நெல்சனுக்காக நான் மிகவும் மகிழ்கிறேன். புரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருவரும் ஜாலியான, பொழுதுபோக்கு கலந்த படத்தில் வருகிறார்கள். ஆனால் யார் ஹீரோ? என நீங்கள் இயக்குனரைத்தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.