சினிமா செய்திகள்

‘கர' படத்தில் நடிகை மமிதாவை தேர்வு செய்தது ஏன்?- விக்னேஷ் ராஜா விளக்கம்

‘கர’ திரைப்படத்தில் நாயகியாக மமிதா பைஜு தேர்வு செய்யப்பட்டதற்கு இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

'போர் தொழில்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கர'. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற விவாதம் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தில் நாயகியாக மமிதா பைஜு தேர்வு செய்யப்பட்டதற்கு இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுவது அவர்களின் மொழி அல்லது பிராந்திய அடிப்படையில் அல்ல; மாறாக, அவர்களின் நடிப்பு திறன், மார்க்கெட் மதிப்பு மற்றும் குறிப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு பொருந்துகிறார்கள் என்பதுதான் முக்கியம் என தெரிவித்தார்.

மேலும் ‘கர’ திரைப்படத்திற்காக சுமார் 20 முதல் 25 பேர் வரை ஆடிஷன் நடத்தப்பட்டது. ஆனால் திறமைக்கு யாரும் சமமாக இல்லை. அவருடைய நடிப்பு திறன், உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்துடன் அவருடைய பொருத்தம் ஆகியவை மற்றவர்களை விட தெளிவாக முன்னிலையில் இருந்ததாக விளக்கினார். இந்த விளக்கத்தின் மூலம், நடிகர் தேர்வில் திறமை மற்றும் கதாபாத்திர பொருத்தமே முதன்மை என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.