தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், சமீபத்திய நேர்காணலில் தனது திருமண வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், இரு குடும்பங்களையும் கவனிக்க வேண்டியிருப்பதால் சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியுள்ளது. சென்னையில் தனக்கென ஒரு குடும்பம் அமைந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கவலை திரையுலகில் இருப்பதாகக் குறிப்பிட்ட பார்வதி நாயர், இந்த மனநிலை மெல்ல மாறி வருகிறது. தமிழ் திரையுலகமும் விரைவில் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். திருமணத்துக்குப் பிறகும் நடிப்புத் தொழில் தனது அடையாளத்தில் முக்கியமானதாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திருமண வாழ்க்கையையும் தொழிலையும் இணைத்துச் செல்வதில் உள்ள சவால்கள் குறித்தும் பேசியுள்ளார்.
நடிகைகளுக்கான வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் திறமையைவிட சந்தைப்படுத்துதல் முக்கியப் பங்கு வகிப்பதாக பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். விளம்பரங்கள் அல்லது வைரலாகும் பாடல்கள் மூலம் கவனம் பெறும் நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும், தனது திரைப்பயணத்தில் விளம்பர உத்திகளைப் பயன்படுத்தாதது பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் புதிய கதைகளைக் கேட்டு வருவதாகவும், விரைவில் தமிழ் ஓடிடி தொடரில் நடிக்க விரும்புவதாகவும், ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நல்ல கதைகளிலும், அர்த்தமுள்ள கதாபாத்திரங்களிலும் நடிப்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.