சினிமா செய்திகள்

‘2031-ல் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா?’ - விக்னேஷ் சிவன் பதில்

குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் அமைதியும், நிறைவுமே இப்போதைக்கு போதுமானதாக உள்ளது என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக உணவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உணவு வழங்கும் தொண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உணவு குறித்தும், பெற்றோர்களை கவனித்துக் கொள்வது குறித்தும் நெகிழ்ச்சியாக பேசினார்.

அவர் பேசுகையில், “என்னுடைய அப்பா, அம்மா இருவருமே காவல்துறையில் பணியாற்றியதால், எங்களுக்கு சாப்பாட்டு பிரச்சனை வந்ததில்லை. பலர் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

பெற்றோர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களை முதியோர் இல்லத்தில் விடுபவர்கள் எல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியவில்லை. இதையெல்லாம் செய்திகளில் பார்க்கும்போது கோபம்தான் வருகிறது” என்றார்.

மேலும், 2031 தேர்தலில் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் இப்போதுதான் தாயார் ஆகியிருக்கிறார். தற்போது எங்களுடைய முழு கவனமும் எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தையும் நல்லபடியாக பார்த்துக்கொள்வதில்தான் இருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் இந்த அமைதியும் நிறைவுமே இப்போதைக்கு எங்களுக்கு போதுமானதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT