தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ‘ஜன நாயகன்’ முழு திரைப்படமும் கடந்த 10ம் தேதி இணையத்தில் வெளியானது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படம் இணையதளத்தில் வெளியானது திட்டமிட்டு நடந்ததா? அல்லது தற்செயலாக நடந்ததா? என கேள்விகள் எழுந்தன. பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ படம் இணையதளத்தில் வெளியானது விஜய் ரசிகர் கள், த.வெ.க. தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படம் வெளியான விவகாரத்தில், தணிக்கை வாரியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் படத்தை முதன் முதலாக கசியவிட்டவர்களா? அல்லது பகிர்ந்தவர்களா? என்ற விவரம் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த விரிவான அறிக்கையை சைபர் கிரைம் போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்க ஆவலாக இருந்தனர். ஆனால், இப்போது முழுப்படத்தையும் பல லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் என்பதால் திரையரங்குகளில் வெளியானாலும் வணிக ரீதியான பாதிப்பை இப்படம் கண்டிப்பாக சந்திக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்படத்தைத் தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால் விஜய் அதே தயாரிப்பு நிறுவனத்தில் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் ஆகியோர் இயக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.