சினிமா செய்திகள்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா? - சிலம்பரசன் பதில்

எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குச் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை அதிகளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி இதுவரை 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இன்று காலை 7 மணி முதலே நடிகர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய அரசியல் கட்சியினர் தங்களது வாக்குகளை செலுத்தினர். அந்த வகையில், தியாகராயநகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிம்பு ஜனநாயக கடமையை ஆற்றினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் சிம்பு கூறியதாவது: காலையிலேயே எல்லாம் தங்களது வாக்கினை அளிக்க வேண்டும் என்று டுவீட் போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் வித்தியாசமான தேர்தலாக உள்ளது. எல்லா தரப்பினரிடமும் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனையே நான் நல்ல மாற்றமாகப் பார்க்கிறேன்.

மாற்றம் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. மாற்றம் குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எல்லா கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அதனால், பயாஸ்டாக ஒரு விஷயத்தை சொல்ல முடியாது. அவரவர் கடமை, அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடப் போகிறார்கள்.

இந்த முறை மக்களிடம் ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்கிற அபரிமிதமான ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. அதனால், காத்திருந்து பார்ப்போம். எந்தக் கட்சிக்காகவும் நம்மால் பேச முடியாது. நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்விக்கு, ஏம்மா நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா. இப்போதுதான் என் பிரச்சினை எல்லாம் தீர்த்து நன்றாக நடிக்கலாம் என்று இருக்கிறேன். அதை கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே என்று கூறி சிரித்தார்.

எந்த துறையில் இருந்து யார் வந்தாலும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். நாம் இந்த இடத்துக்கு வந்துவிட்டால் விமர்சனம் என்பதை தாங்கித்தான் வாங்க வேண்டும் என்று கூறினார்.