‘தாய் மண் திரையகம்’ படத்தயாரிப்பு நிறுவனர் ராஜேஸ்வரி வேந்தன். மயங்கினேன் தயங்கினேன், ஜின் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் கடந்த 13 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். 2023-26 தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளார். கடந்தாண்டு இவர், தயாரிப்பாளர் சங்கத்தில் பொதுக்குழு நடத்தவில்லை என்றும், 2022-25 வரை ஆண்டறிக்கைகளை சமர்பிக்கவில்லை என்றும் பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளரிடம் கடந்தாண்டு ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை சார்பில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பற்றி அவதுாறாக பேசியதாக கூறி ராஜேஸ்வரியை கடந்தாண்டு செப்டம்பர் முதல் மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக சங்கத்திலிருந்து நீக்கினர். இதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடுத்தார். இதைத்தொடர்ந்து சங்க விதிகளின் படி, ராஜேஸ்வரியை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக மாற்றப்பட்டது.
தன் மீதான நடவடிக்கையை கைவிடும்படி சங்க செயற்குழுவுக்கு கடந்தாண்டு ராஜேஸ்வரி மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் நேரிலும் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் ராஜேஸ்வரியை சங்கத்திலிருந்து நீக்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் தன்னை தகாத வார்த்தையால் திட்டியதோடு, பலர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தனர் எனக்கூறி ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேஸ்வரி “சங்கத்தில் கேள்வி கேட்டதற்காக ராதாகிருஷ்ணனும், கதிரேசனும் என் மீது தவறான குற்றம் சாட்டி, சங்கத்திலிருந்து நீக்கினர். அவர்கள் சொன்னபடி பலர் முன்னிலையில் மன்னிப்பும் கேட்டேன். ஆனால், சங்கத்திலிருந்து நீக்கியதுடன், வரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும், சில தயாரிப்பாளர்களிடம் கூறி அவர்கள் மூலமும் என்னை தகாத வார்த்தையால் திட்டி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி போலீஸ் கமிஷ்னரகத்திலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தேன். இதை ஏற்ற மகளிர் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்” என்றார்.