சினிமா செய்திகள்

இளம் வயதில் எடுத்த தவறான முடிவுகள்... ஸ்ரீலீலா வெளிப்படையான பேச்சு

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்து ஸ்ரீலீலா மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை,

எனது இளம் வயதில் திரைப்பயணத்தைப் பொறுத்தவரை சில தவறுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன். சில படங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன் என நடிகை ஸ்ரீலீலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா. தனது அழகான நடிப்பு மற்றும் துள்ளலான நடனத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிப்பில் மட்டுமின்றி மருத்துவப் படிப்பையும் முடித்துள்ள இவர், தற்போது தமிழ் மற்றும் இந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் படங்களில் கவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீலீலா, தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 'தர்மன்', அஜித்தின் 'டேர் டெவில்' உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து அனுராக் பாசு இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.

இதற்கிடையே, தனுஷுடன் 'ஓம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். 'அமரன்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் தனுஷின் சிறுவயது தோழியாகவும், பின்னர் அவரது மனைவியாகவும் ஸ்ரீலீலா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ள இப்படம், தமிழ் திரையுலகில் ஸ்ரீலீலாவுக்கு முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகால படத் தேர்வுகள் குறித்து வருத்தம்

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்து ஸ்ரீலீலா மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, "எனது இளம் வயதில் திரைப்பயணத்தைப் பொறுத்தவரை சில தவறுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன். என்னைத் தேடி வந்த எல்லாப் படங்களிலும் கையெழுத்திட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, படங்களைத் தேர்வு செய்வதில் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சில படங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தனது ஆரம்பகால படத் தேர்வுகள் குறித்து ஸ்ரீலீலா வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தற்போது கதைகளைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்தடுத்த படங்களின் மூலம் தனது திரைப்பயணத்தில் புதிய உயரத்தை அடைவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

SCROLL FOR NEXT