சினிமா செய்திகள்

மறைந்த இயக்குநர் மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய யோகிபாபு

இயக்குநர் சுரேஷ் சங்கையா ‘கெணத்த காணோம்’ படத்தை எனக்கு கொடுத்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்று யோகி பாபு பேசியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்து, இப்போது ‘கெணத்த காணோம்’ வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக தியாகராஜன், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், தமிழ், வசந்தபாலன், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த விழாவில் யோகி பாபு பேசும் போது, “இயக்குநர் சங்கையாவை எனக்கு ’காக்கா முட்டை’ படத்தில் இருந்தே தெரியும். ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது எனக்கு பயம், இப்போதுதான் காமெடியனாக சென்று கொண்டிருக்கிறோம். ஆனாலும் நல்ல கதை, ஒரு கதாபாத்திரத்தைச் சொல்லி அதில் நடிக்க அழைத்தார், அதிலும் நடிக்க முடியாமல் போனது. நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். இந்த படத்தை எனக்கு கொடுத்ததை பாக்கியமாக கருதுகிறேன். நான் ஏற்கனவே கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன்" என்று யோகி பாபு பேசியுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையை அவரின் மனைவி மற்றும் மகளிடம் வழங்கினார்.