சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் புது படம் குறித்து வெளியான அப்டேட்

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஜெயிலர், கடைசி விவசாயி, மெர்சல், மாஸ்டர் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, ஆர்.கிஷோர் குமார் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக யோகி பாபு பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். 9 லைட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், யோகி பாபு ஒரு உளவாளி போன்ற உடையில் மிலனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாக நிற்கிறார்.

சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய சமூக நையாண்டிப் படமான ‘கெணத்த காணோம்’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்து, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, அல்லு அர்ஜுன்-அட்லீயின்‘ராக்கா’, ரவி மோகனின் முதல் இயக்கமான ‘ஆன் ஆர்டினரி மேன்’ உள்ளிட்ட பல படங்கள் யோகி பாபு கைவசம் உள்ளன.