சினிமா செய்திகள்

யோகி பாபுவின் “சன்னிதானம் பிஓ” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

நடிகர் யோகி பாபு அமுத சாரதி இயக்கத்தில் ‘சன்னிதானம் பிஓ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது இயக்குனர் அமுத சாரதி இயக்கத்தில் ‘சன்னிதானம் பிஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம், யோகி பாபுவை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள ‘சன்னிதானம் பிஓ’ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார். அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘சன்னிதானம் பிஓ’ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார்.

சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘சன்னிதானம் பி.ஓ’ படக் குழுவினர் படத்தின் முதல் பாடலான ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடலை வெளியிட்டுள்ளனர். அபிஷேக் ராஜு , விஷ்ணு ராம் ஆகியோர் பாடிய பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘சன்னிதானம் பிஓ’ மே மாதம் திரைக்கு வர உள்ளது.