தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்பி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகின்றன.
தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக முன்னணி நடிகரான விவேக் ஓபராய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “என் சகோதர் விஜய், இது சாத்தியமே இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். இது வெறும் "ரசிகர்களின் ஆரவாரம்" மட்டுமே என்று அவர்கள் இகழ்ந்தார்கள். ஆனால், இப்போது உங்களைப் பாருங்கள்! "என்ன நண்பா, சொல்லி அடித்தோம் அல்லவா!" அந்த வார்த்தைகளை திரையிலிருந்து நீங்கள் எடுத்து, இந்த மண்ணின் வரலாற்றிலேயே பொறித்துவிட்டீர்கள். அந்தத் தீவிரமான திரையுலகச் சக்தியை நீங்கள் எடுத்துக்கொண்டு, அதை நிஜ உலகின் ஒரு புரட்சியாகவே உருமாற்றிவிட்டீர்கள். அந்த கர்ஜனை நிஜமானது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது, எதிர்காலம் உங்களுக்கே சொந்தம். உங்களைக் குறித்துப் பெருமை கொள்கிறேன், முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் விவேக் ஓபராய்.