சினிமா செய்திகள்

யூடியூபர் ஜி.பி.முத்து மீது தாக்குதல் - ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

தன்னை தாக்கியவர்கள் தனது மகள்கள் குறித்து ஆபாசமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவைச் சேர்ந்தவர் யூடியூபர் ஜி.பி.முத்து. சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் புகழ்பெற்ற இவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து வீட்டின் அருகில் உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கட்டும் வகையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், எனவே, கட்டுமான வேலைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜி.பி.முத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கினார். இதையடுத்து கோவில் கட்டுமான வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஜி.பி.முத்து தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சிலர் நுழைந்து தகராறு செய்ததாகவும், அதனை தட்டிக்கேட்டபோது, அந்த நபர்கள் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியதாகவும் ஜி.பி.முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முகத்தில் ரத்த காயத்துடன் பேசிய ஜி.பி.மூத்து, தன்னை தாக்கியவர்கள் தனது மகள்கள் குறித்து ஆபாசமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.