சினிமா செய்திகள்

மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதல்முறையாக மலையாள திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.

அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது. இதுவரை 200 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா தமிழில் கடந்தாண்டு 5 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

மலையாளத்தில் நடிகராக இருக்கும் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக ‘பனி’ என்ற தனது முதல் படத்தை 2024ல் இயக்கினார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடரந்து தற்போது இரண்டாவது படத்தை எழுதி இயக்குகிறார். காவ்யா பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜோஜூ ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிமுகமாகிறார் . இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. முதல்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.