சினிமா

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டிராகன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். மேலும், இந்தப் படத்திற்காக ஜூனியர் என்டிஆர் வெறும் 20 நாட்களில் சிக்ஸ்-பேக் உருவாக்கியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் இன்று தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டிராகன் படக்குழு ஜூனியர் என்டிஆர்-க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், 04.35 நிமிடங்கள் கொண்ட மிரட்டலான வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.