சினிமா

மணிரத்னம் படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் வெளியானது... ஜூலை 5 முதல் படப்பிடிப்பு

'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், படத்தின் இசையமைப்பாளர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், தற்போது ஏ.ஆர். ரகுமானே இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்றும், மணிரத்னத்தின் நீண்டநாள் கூட்டணியான ஏ.ஆர். ரகுமானே இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், படத்திற்கான ஒரு பாடலை ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான் உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் இணையும் மணிரத்னம் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணி

1992-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படம் முதல் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்து பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளனர். இந்த புதிய படத்திலும் அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. முன்னதாக, 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைகிறார்.

ஜூலை 5-ல் தொடங்கும் படப்பிடிப்பு...

விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணையும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை 5-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, மொத்த படப்பிடிப்பையும் 50 நாட்களுக்குள் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஓடிடி உரிமை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்?

அழுத்தமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் அந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.