சென்னை,
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, அந்த கலையை உலகளவில் கவனம் ஈர்க்கச் செய்யவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு மேடைகளில் கானா பாடலை பாட வேண்டும் என்ற அவரது முயற்சி தோல்வியடைய, அவரது மகனும் அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத்துறையில் சாதிக்க நினைக்கிறார். ஆனால், அதுவும் நடக்காமல் போகிறது.
இதையடுத்து மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் ஹிப்ஹாப் ஆதி, தனது தாத்தா மற்றும் அப்பா போல் கானாவை உலகறிய செய்ய பெரும் முயற்சி எடுக்கிறார். அவர் வெற்றி பெற்றாரா? இசைத்துறையில் சாதித்தாரா? கானாவை உலகளவில் கொண்டு சென்றாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.
ஹிப்ஹாப் ஆதி வழக்கம் போல் 'அட்வைஸ்' சொல்லி ரசிகர்களை ஆட்டம் போடவும் வைத்திருக்கிறார். ஆட்டம், பாட்டம் என்று படம் முழுக்க ரசிக்க வைத்துள்ளார். சென்னை கானாவுக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் அவரது முயற்சிகளும், அவரது நடவடிக்கைகளும் நிச்சயம் சென்னை மக்களை பெருமை கொள்ள செய்யும். குறிப்பாக வடசென்னை மக்களின் கொண்டாட்ட நாயகனாக மாறியுள்ளார்.
சைத்ரா ஆர்ச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு நாயகி என்று மூன்று நாயகிகளும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். கெட்டிகா சர்மாவின் ஆட்டம் இளசுகளை ஏக்கம் கொள்ளச் செய்யும். சைத்ராவின் நடிப்பு கவனம் ஈர்த்துள்ளது. ரம்யாவின் சிரிப்பும் ரசிகர்களின் இதயங்களை எட்டிப் பிடிக்கும்.
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சரியான முறையில் வழங்கியிருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. ஹிப்ஹாப் ஆதியின் இசை ரசிகர்களை ஆட்டம் போட செய்துள்ளது. 'ஆரா பத்துக்கு பத்து...' பாடல் கொண்டாட்டத்தின் உச்சம்.
முதல் பாகத்தின் அதே மையக்கருவை ஒரு கையிலும், மறு கையில் புரட்சியையும் ஒருசேர எடுத்து, இளைஞர்களுக்கு அட்டகாசமான விருந்து வைத்திருக்கிறார், ஹிப்ஹாப் ஆதி. நடிப்பு தாண்டி இயக்குனர் அவதாரத்திலும் கவனம் ஈர்த்துள்ளார், ஹிப்ஹாப் ஆதி. மீசையை முறுக்கி விட்டுள்ளார் என்று சொல்லலாம். கிளைமேக்ஸ் கொண்டாட்டம்.