சினிமா விமர்சனம்

பாசத்தால் நெகிழ வைக்கும் படம்.. "அப்பா குட்டி" பட விமர்சனம்

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அப்பா குட்டி படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, தனது மகள் லிதன்யாவுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியை பிரீத்தி அஸ்ராணி, விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிக்கிறார். இதற்கிடையில் விஜய் ஆண்டனி இறந்ததாக சொல்லும் அவரது மன வியை, ஊட்டியில் கணவர், குழந்தை சகிதமாக பிரீத்தி அஸ்ராணி பார்க்கிறார். விஜய் ஆண்டனிக்கு திருமணமே நடைபெறவில்லை என்ற உண்மை அறிந்து அவர் மீது வருத்தம் கொள்கிறார்.

இந்த சூழலில் சிறுமி லிதன்யாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. அரியவகை நோயால் பாதிக்கப்படும் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. குறிப்பாக சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கும் அவசர சூழலும் உருவாகிறது.

இக்கட்டான இந்த சூழலில் சிறுமியின் உண்மையான பெற்றோரை தேடி செல்லும் விஜய் ஆண்டனியின் முயற்சி பலித்ததா? விஜய் ஆண்டனியிடம் அந்த சிறுமி வந்தது எப்படி? என்ற கேள்வி களுக்கு பதிலாக மீதி கதை நகர்கிறது.

விஜய் ஆண்டனி வழக்கம்போல அலட்டல் இல்லாத நடிப்பால் கவர்கிறார். 'எமோஷனல்' காட்சிகளிலும் 'ஸ்கோர்' செய்கிறார். பிரீத்தி அஸ்ராணி அழகாலும், அளவான நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிப்பு.

குறும்புத்தனமான பேச்சால் படம் முழுக்க ரசிக்க வைக்கும் சிறுமி லிதன்யா, படத்தின் இறுதியில் அனைவரையும் கலங்கடித்து விட்டார். பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, லிசி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், ஜென்சன் திவாகர் என அனைவருமே நடிப்பில் குறை வைக்கவில்லை.

ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் ஓகே ரகம். உருக்கமான 'கிளைமாக்ஸ்' உள்பட உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதி இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். சில இடங்களில் நாடகத் தனமாக காட்சிகள் நகர்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மருத்துவத்துறையில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான உண்மை சம்பவங்களை கொண்டு, அதில் அப்பா-மகள் பாச போராட்டத்தையும் கடத்தி படம் முழுக்க கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் மு.மாறன்.

அப்பா குட்டி -அழுத்தக்காரன்

SCROLL FOR NEXT