சென்னை,
கல்லூரியில் மகளிர் கழிப்பறையில் தவறாக நுழைந்த காரணத்துக்காக 'டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார் ஏகன். அவசர கதியில் அவருக்கு இன்னொரு கல்லூரி தேட, சமீபத்தில் இருபாலர் படிக்க அனுமதி வாங்கியுள்ள பெண்கள் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.
அங்கு ஏகன் ஒருவர் தான் மாணவர். மற்ற அனைவருமே பெண்கள். இதற்கிடையில் ஏகனுக்கும், உடன் படிக்கும் மாணவி ஸ்ரீதேவி அப்பல்லாவுக்கும் காதல் மலருகிறது. ஆனால் தனது காதலிக்கு நிறைய 'கண்டிஷன்' போடும் பேர் வழியாக ஏகன் இருக்க, அந்தக்காதல் முறிகிறது.
கல்லூரி முடிந்து ஏகனுக்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் உயர் அதிகாரியாக வேலை கிடைக்கிறது. அங்கு பணியில் சேருகிறார், பெமினா ஜார்ஜ். பெமினாவுக்கு அவரது காதலரால் சொல்ல முடியாத பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. காதலரின் அடக்குமுறைகள் அத்துமீற, தனது காதலை முடிவுக்கு கொண்டுவந்து பிரிகிறார்.
இந்த சூழலில் ஏகனுக்கும், பெமினாவுக்கும் இடையே காதல் மலருகிறது. ஆனால் சில காரணங்களுக்காக இருவருக்கும் இடையே சில முட்டல்கள்-மோதல்கள் உருவாகிறது. ஏகனின் முன்னாள் காதலியை இன்னாள் காதலி சந்திக்க இந்தக் காதலும் முறிகிறது. காதல் பிரிவில் இருக்கும் இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே கதை.
எதார்த்தமான நடிப்பால் படம் முழுக்க கவருகிறார் ஏகன். ஸ்ரீதேவி அப்பல்லாவும், பெமினா ஜார்ஜூம் தங்கள் பணியை குறைவின்றி செய்திருக்கிறார்கள். அதிர்ச்சி அருண், ஜென்சன் திவாகர், சுப்ரமணிய சேது, அதியமான், மைம்கோபி உள்ளிட்ட அனைவருமே பொருத்தமான தேர்வு.பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
ரசிக்க வைக்கும் காதல் காட்சிகள் பலம். ஆனால் அதற்காக 'லாஜிக் மீறல்' கூடாதல்லவா? வித்தியாசமாக இருந்தாலும், பெண்கள் கல்லூரியில் ஒரு ஆண் மட்டுமே படிப்பார் என்பதை நம்பமுடியவில்லை சாரே... கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்.
காதல், கலகலப்பு இரண்டையும் சரிவிகிதத்தில் புகுத்தி ஒரு புதுமையான காதல் கதையை சொல்லி கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னசாமி.