சினிமா விமர்சனம்

பழைய காதலைத் தேடும் பயணம்... "வித் லவ்" திரை விமர்சனம்

மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள "வித் லவ்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

திருமணத்திற்காக குடும்பத்தார் பார்த்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதில் தங்கள் முதல் காதலை தேடி போய் பார்க்கலாமே... என்று அனஸ்வரா ராஜன்னுக்கு யோசனை செல்கிறார். இதையடுத்து இருவரும் இணைந்து தங்களது முதல் காதலை தேடிச் செல்கிறார்கள்.

அந்த தேடுதல் பயணம் இவர்களிடத்தில் காதலை உண்டாக்கியதா ? இல்லையா ? என்பதை மனதை கீறும் நிகழ்வுகளாக சொல்கிறது மீதி கதை.

எதார்த்தமான நடிப்பால் கவரும் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொருந்துகிறார். நடிப்பிலும் அசத்துகிறார்.

படம் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும்படி கண்களாலும், முக பாவணைகளாலும் நடிப்பில் கலக்கியுள்ளார் அனஸ்வரா ராஜன்.

பள்ளிப் பருவ காதலர்களாக வரும் காவ்யா அனில், ஹரிஷ்குமார் கவனம் ஈர்க்கிறார்கள். தேனி முருகன், சரவணன், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் என அனைவருமே கதையின் ஓட்டத்துக்கு உதவியுள்ளார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டான் இசையும் படத்தின் ஓட்டத்துக்கு உதவியுள்ளது. பழைய காதல் பற்றிய எண்ணங்களை நம்முள் 'ரீவைண்டு' செய்கிறது.

நெஞ்சை வருடம் காதல் காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.

பள்ளிப் பருவக் காதல் என்ற வலி நிறைந்த நினைவுகளை உணர்ச்சிப் போராட்டங்களை உள்ளடக்கிய படமாக வடிவமைத்துள்ளார், இயக்குனர் மதன். காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

SCROLL FOR NEXT