1970-ல் நடக்கும் கதை. தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலை கிராமத்திற்கு இன்ஸ்பெக்டராக வரும் இசக்கி கார் வண்ணன், அந்தப் பகுதியில் எந்த குற்றங்களும் நடக்காமல் இருப்பதை கண்டு ஆச்சரியம் கொள்கிறார். இந்த சூழலில் அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் பிரவீன் பழனிசாமி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து இசக்கி கார்வண்ணன் அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார்.
இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிறது. அந்த ஊரில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தொடர்ச்சியாக அங்கு கொலைகளை அரங்கேற்றி வருவது தெரிய வருகிறது. அந்த கும்பல் ஏன் கொலைகளை செய்து வருகிறது? இந்த கொலைக்கான பின்னணி என்ன? ஆசிரியர் பிரவீன் பழனிசாமி கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக இசக்கி கார்வண்ணன் மனதில் நிற்கிறார். கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து குற்றவாளியை நெருங்கும் இடங்களில் அவரது நடிப்பு பரபரப்பு ஏற்படுத்துகிறது.
அபி நட்சத்திரா வின் அழுத்தமான நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. ஆசிரியராக வரும் பிரவீன் பழனிச்சாமி தனது கதாபாத்திரத்தை நிறைவாக நகர்த்தி இருக்கிறார். செல்வகுமார், காதல் சுகுமார், கரன் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் அத்தனை பேரும் தங்களது திறமையான நடிப்பை கொட்டி இருக்கிறார்கள்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவும், தீசனின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. எதார்த்த கதைக்களமும், திரைக்கதை ஓட்டமும் படத்துக்கு பலம். சில காட்சிகளில் பில்டப்பை குறைத்து இருக்கலாம்.
மலைவாழ் மக்களின் நாகரிகத்தை அப்படியே பிரதிபலிக்கும் அதேவேளை, பெண்களுக்கான கொடுமைகளை எடுத்துரைத்து தனது சாட்டையடி வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் கிட்டு. இது பெண்களுக்கான படைப்பு.