சென்னை,
சவாரி என்ற இனத்தின் மக்களை மோகன்பாபு அடிமைகள் போல நடத்தி வேலை வாங்கி வருகிறார். அடிமைகள் போல வாழும் கூட்டத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார், கர்ப்பிணி பெண்ணான சோனாலி குல்கர்னி. இதனால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்.
இந்தசூழலில் அவருக்கு 2 குழந்தைகள் பிறக்கிறார்கள். இதில் பெண் குழந்தை இறந்துபோக, நானி உயிர் பிழைக்கிறார். அவரை கஷ்டப்பட்டு வளர்க்கிறார், சோனாலி குல்கர்னி.
இந்த சூழலில் எதிர்பாராத ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை செல்லும் நானி, 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையாகி வெளியே வருகிறார். ஆனால் அப்போதும் தனது இனத்தின் மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்களே... என்று ஆத்திரம் கொள்கிறார்.
அடக்குமுறைக்கு எதிராக போராடி அடிமையாக இருக்கும் தன் இனத்தை மீட்டு, அவர்களுக்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா ?, என்பதே மீதி கதை.
ஜடால் என்ற கதாபாத்திரத்தில் இரட்டை சடையுடன் வலம் வரும் நானி, தனது ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் படத்தை தோளில் சுமந்திருக்கிறார். ஆக்ஷன், அதிரடி, எமோஷனல் என எல்லா பரிமாணங்களிலும் மிளிர்கிறார். கயாடு லோஹர், கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவரை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
மோகன் பாபு வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். சோனாலி குல்கர்னி, சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் என அனைவருமே குறைவில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய் காட்சிகளில் மிரட்டியுள்ளார். அனிருத் இசையும் ஆட்டம் போட வைத்திருக்கிறார். படத்தின் திரைக்கதை பலம். அதீத வன்முறை காட்சிகளும், லாஜிக் மீறல்களும் பலவீனம்.
அடிமை சங்கிலியை உடைக்க போராடும் நாயகன் என்ற வழக்கமான கதைக்களம் என்றாலும், கொஞ்சம் திரைக்கதையை மாற்றி எழுதி காட்சிகளை அடுக்கி படத்தி இயக்கியுள்ளார், ஸ்ரீகாந்த் ஒடேலா. இன்னும் திரைக்கதையில் கனம் இருந்திருக்கலாம். இடைவேளையும், கிளைமேக்ஸ் காட்சியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.