இவானா வருணுக்கு அவரின் குடும்பத்தினர் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை திடீரென இறந்து போகிறார். இதையடுத்து இவானாவை ஆறுதல் படுத்தும் அவரது தந்தை, மகளுக்கு வேறு வரன்களை தேடுகிறார். ஆனால் இவானாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவோர் வரிசையாக மர்மமான முறையில் உயிரிழந்து போகிறார்கள். இதையடுத்து இந்த வழக்கை காவல்துறை கையில் எடுக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜன் வழக்கை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இவானா மீது பிரஜனுக்கு காதல் மலர்கிறது. திருமணமும் முடிவாகிறது. பிரஜனுக்கு என்ன ஆனது? இந்த திருமணம் கைகூடியதா? இதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
பிரஜன் டிப் டாப் போலீஸ் அதிகாரியாக கலக்குகிறார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது. கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.
அழகாலும், நடிப்பாலும் கவர்கிறார் இவானா வருண். இனி அவர் பிசியான கதாநாயகியாக மாறுவது நிச்சயம்.
ஆதிரன், அனுபமா குமார், பத்மென், செந்தில்குமாரி, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் உள்பட நடிகர் - நடிகைகள் அனைவருமே பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
கிஷோரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல். ஹரி எஸ்.ஆரின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. விறுவிறுப்பான, பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகள் யூகிக்க முடிகிறது.
இவனாவை காதலிப்பவர்கள் திருமணம் எல்லோருமே மர்மமான முறையில் இறக்கிறார்கள் என்பது தெரிந்தும், இவானாவை பிரஜன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வது அடுத்து இவருக்கு என்ன ஆகுமோ? என்ற பதற்றம் படம் முழுக்க இருக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் கெடாமல் கடைசிவரை நகர்த்தி, நல்லதொரு திரில்லர் படத்தை கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் சந்தோஷ் ராவணன். கிளைமேக்ஸ் திருப்பம்.