தடவியல் நிபுணரான பாவனா, எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் தன் பெற்றோரை பறிகொடுக்கிறார். பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார். அவரை மிகவும் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார் பாவனா.
இதற்கிடையில் ஷெபின் பென்சன் போன்ற ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொள்கிறார். அவர் உயிரிழந்த சில நாட்களில் ஷெபின் பென்சனும் உயிரிழந்து போகிறார். இந்த இரண்டு மரணங்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதை பாவனா யூகிக்கிறார்.
காவல்துறை இந்த வழக்கை சாதாரணமாக கையாண்டு வரும் சூழலில், இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய களத்தில் இறங்குகிறார் பாவனா. இந்த இரண்டு மரணங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பாவனா கண்டுபிடிக்கும் சூழலில், இன்னொரு கொலையும் அரங்கேறுகிறது. இந்த கொலைகளுக்கெல்லாம் காரணம் என்ன? கொலையாளி யார்? அவரை பாவனா கண்டுபிடித்தாரா, களையெடுத்தாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.
தடவியல் நிபுணராக பாவனா, கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது முதிர்ச்சியான நடிப்பு பலம் என்றே சொல்லலாம். சாதாரண தடயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கொலையாளியை அவர் நெருங்குவது பரபரப்பின் உச்சம். முக பாவனைகளே வசனங்களை சொல்லி வசீகரிக்கிறது.
தொடக்கத்தில் சாதாரணமாக தோன்றினாலும், பின்னர் விறுவிறுப்பு கூட்டுகிறார் காவல் அதிகாரி ரகுமான். இக்கட்டான சூழலில் பாவனாவுக்கு அவர் தோள்கொடுப்பது சிலிர்ப்பு.
ஷெபின் பென்சன், அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என அனைவருமே நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்கள். மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு பரபரப்பை கூட்டுகிறது. கொலைக்கான காரணத்தை காட்சி வழியாகவே புரியவைக்கும் இடம் சிலிர்ப்பு. ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாதி மெதுவாக செல்கிறது.
வழக்கமான சைக்கோ திரில்லர் கதை என்றாலும், கொலைக்கான காரணத்தை வித்தியாசமான முறையில் கூறி, யூகிக்க முடியாத காட்சிகள் மூலம் உன்னிப்பாக கவனிக்கும்படி செய்துள்ளார், இயக்குனர் ரியாஸ் மராத். திரில்லர் விரும்பிகளுக்கு புதிய அனுபவம்.