சென்னை,
'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களை இயக்கி ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணாவின் நீண்ட வருடங்களுக்கு பிறகான படைப்பு. பெரும் தொழில் அதிபரின் மகளான ரோஸ்மின், வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வரும் ராணவ்-க்கு தனது நிறுவனத்திலேயே வேலை ஏற்பாடு செய்து தருகிறார். இருவரிடையே நட்பு ஏற்பட்டு, பின்பு காதலாக மாறுகிறது.
தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவ்-ஐ திருமணம் செய்துகொள்ளும் ரோஸ்மின், தனது பதவியை கணவருக்கு வழங்கி விடுகிறார். எதிர்ப்புகளை மீறி நிம்மதியான வாழ்க்கையையும் முன்னெடுக்கிறார்கள். இனிமையாக செல்லும் இவர்களின் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினை ஏற்படுகிறது. மகிழ்ச்சியும், அன்பும் வெறுப்பும், மோதலுமாக மாறுகிறது. ஒருகட்டத்தில் இருவரும் பிரிய முடிவு எடுக்கிறார்கள். அதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராணவ், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அலங்கரிக்கிறார். மன போராட்டங்களை வெளிப்படுத்தும் இடங்களில் எதார்த்தமான நடிப்பால் அசத்துகிறார். அதேபோல அறிமுக நாயகியாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார், ரோஸ்மின். ஆளுமையான அவரது கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. பணக்கார பெண்களின் மனநிலையை கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கிறார். அவரது உயரமும், கவர்ச்சியும் கூடுதல் பிளஸ்.
இன்னொரு கதாநாயகன் - கதாநாயகியாக நடித்துள்ள கிரித்திக் மோகன் - அமிதா ரங்கநாத் ஜோடியும் அசத்துகிறார்கள். கிளுகிளுப்பிலும் ரசிக்க வைக்கிறார்கள். தொழில் அதிபராக சம்பத் ராஜ், டாக்டராக கஸ்தூரி மேலும் அர்ச்சனா உள்ளிட்டோர் அனைவருமே நல்ல தேர்வு. அனுபவம் பேசுகிறது.
எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை படத்தோடு பயணிக்க வைக்கிறது. எதார்த்தம் நிறைந்த அழுத்தமான காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் இடிக்கிறது.
காதல், திருமணம் என்று அவசரம் காட்டும் இளைய தலைமுறையினர் பிரிவிலும் அதை தொடர்வது சரியா? என்ற கண்ணோட்டத்தில் உணர்வுப்பூர்வமான கதை சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. காதலர்களுக்கு நல்ல மெசேஜ் காத்திருக்கிறது.