சென்னை,
ராணுவ கமாண்டோவான வீர அன்பரசு, ஒரு பஸ் பயணத்தின் போது ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் ஏஞ்சலை சந்திக்கிறார். நட்பு காதலாக மாறுகிறது. தனது காதலை சொல்ல வீர அன்பரசு தயங்குகிறார். இதற்கிடையில் மத்திய மந்திரி மகளை தீவிரவாத கும்பல் கடத்தி தங்கள் சொல்லும் விஷயங்களை செய்து தருமாறு மிரட்டுகிறார்கள்.
இதை எடுத்து மத்திய மந்திரியின் மகளை மீட்கும் பொறுப்பு வீர அன்பரசு வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தீவிரவாத கும்பலை அழித்து ஒழிப்பதற்காக தனது குழுவினருடன் காட்டுக்குள் செல்கிறார் வீர அன்பரசு. அப்போது பல்வேறு திருப்பங்கள் அங்கே அரங்கேறுகிறது. மத்திய மந்திரியின் மகள் காப்பாற்றப்பட்டாரா? வீர அன்பரசுவின் காதல் என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி கதை.
யுத்தங்களும், துப்பாக்கி சந்தங்களும் நிறைந்த ஒரு ராணுவ வீரரின் மனதில் உருவெடுத்த காதலை வழக்கமான காதல் கதையாக அல்லாமல் புதுமையான மற்றும் புரட்சிகரமான காதல் கதையாக சொல்லி காதலுக்கும், ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செய்திருக்கிறார் இயக்குநர் வீர அன்பரசு.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் வீர அன்பரசு, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். தேச பக்தியுடன் நாகரிகமாக காதல் சொல்லும் இடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஏஞ்சல் அழகு மற்றும் அளவான நடிப்பால் அசத்துகிறார். தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு.
ஆகாஷ் முத்து நடிப்பு அலங்காரம். ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாய்ஸ் ராஜன், ஓ.ஏ.கே.சுந்தர், துரைபாண்டியன், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா என அனைவருமே நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகளும், சிவராமன் இசையில் பாடல்களும் படத்துடன் ஒன்ற செய்கிறது. லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்கிறது.
வித்தியாசமான தளத்தில் காதலை சொல்லியதுடன், தேசபக்தி உணர்வையும் தூண்டும் வகையில் காட்சிகளை அமைத்து நடிகர் என்பதை தாண்டி இயக்குனராகவும் கவனம் ஈர்த்துள்ளார் வீர அன்பரசு. வித்தியாசமான கதைக்களம் தான்.