சினிமா விமர்சனம்

“கப்புள் பிரண்ட்லி” சினிமா விமர்சனம்

அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “கப்புள் பிரண்ட்லி” படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கட்டுமான துறையில் வெற்றியாளனாக வலம் வர துடிக்கும் சந்தோஷ் சோபனும், ஐ.டி. துறையில் கோலோச்ச துடிக்கும் மானசாவும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திக்கிறார்கள். வேறுவழியின்றி ஒன்றாகவும் தங்க நேர்கிறது.

இந்த தருணம் அவர்களை காதலர்களாகவும் மாற்றுகிறது. இந்த காதலுக்கு அவரது பெற்றோர் தடைக்கல்லாக வர, சந்தோஷ் சோபனை விட்டு பிரிகிறார் மானசா.

இதற்கிடையில் மானசிக்கு இன்னொரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அந்த சிக்கலில் இருந்து அவர் தப்பித்தாரா? காதலரை கரம் பிடித்தாரா? என்பதே காதல் சொட்டும் கதை.

திறமை மிக்க இளைஞராகவும், மனம் கவரும் காதலனாகவும் சந்தோஷ் சோபன் கவர்கிறார். காதலியின் தந்தையிடம் சிக்கிக் கொள்ளும் காட்சியில் எதார்த்த நடிப்பால் சபாஷ் சொல்ல வைக்கிறார்.

மானசா நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். காட்சிக்கு காட்சி வெளுத்துக்கட்டும் அவர், காதல் உடையும் தருணத்தில் உடைந்து போய் நம் மனதை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்.

யோகிபாபு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். கவுரவத் தோற்றத்தில் தலைகாட்டி கவனம் ஈர்க்கிறார் லிவிங்ஸ்டன். ராஜிவ் கன்கலா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட அனைவருமே தன் பங்குக்கு திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தினேஷ் புருசோத்தமனின் கேமரா பொங்கி வழியும் காதலை அழகாக படம் பிடித்துள்ளது. ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் மனதை வருடுகிறது.

எதார்த்தமான காதல் காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.

உண்மையான காதலுக்கு எந்நாளும் மரணமில்லை என்பதை சொல்வதுடன், காதல் மற்றும் திருமணத்தால் பெண்களின் கனவு வீணாகிவிடக்கூடாது என்பதையும் அழுத்தச் சொல்லி நல்ல சமூக கருத்தையும் விதைத்துள்ளார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். கிளைமேக்ஸ் புதுமை.