சினிமா விமர்சனம்

கிரைம் திரில்லர்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? 'காளிதாஸ் 2'- விமர்சனம்

காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

சென்னை,

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அனந்த் நாக் - அபர்ணதி தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறாள். இதையடுத்து உதவி கமிஷனர் பவானிஸ்ரீ, இன்ஸ்பெக்டர் பரத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையை தேடுகிறார்கள். போலீசார் விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் வக்கீல் அஜய் கார்த்தி மீது சந்தேகம் திரும்புகிறது. அதேவேளை காணாமல் போன குழந்தை பிணமாக மீட்கப்படுகிறாள்.

இதையடுத்து அஜய் கார்த்தியை போலீசார் கைதி செய்கிறார்கள். ஆனால் அவரை வக்கீல் பிரகாஷ்ராஜ் காப்பாற்றி விடுகிறார். அஜய் கார்த்தியை குற்றவாளி என நிரூபிக்க போலீசார் போராடுகிறார்கள். அதேவேளை அதே அடுக்குமாடி குடியிருப்பில் இன்னொரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். இதையடுத்து போலீசார் குழம்பிப் போகிறார்கள். இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன? உண்மையான குற்றவாளி யார்? என்று சொல்வதே பரபரப்பான மீதி கதை.

காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதல், கீதல் என்று இல்லாமல் ஒரு காவல்துறை அதிகாரியாக மனதில் பதிகிறார்.

அஜய் கார்த்தி, அதிகம் பேசவில்லை என்றாலும், படம் முழுவதுமே அவரைப் பற்றி தான் பேசுகிறது. முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை காட்டி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்ல அறிமுகம். காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, நடப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளை பிரதிபலித்துள்ளார். அபர்ணதிக்கு சிறிய வேடம் என்றாலும் அதில் அழுத்தம் கொடுத்து நடித்துள்ளார்.

ஆனந்த் நாக், பிரகாஷ் ராஜ், கிஷோரின் அனுபவ நடிப்பு கைக்கொடுத்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் சங்கீதா ஆச்சரியப்படுத்துகிறார். இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு சிறப்பு. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு பரபரப்பு. சாம் சி.எஸ். இசை விறுவிறுப்பு. பின்னணி இசை அபாரம்.

பரபரப்பான காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.

வழக்கமான கிரைம் - திரில்லர் கதை என்றாலும், யாருமே யூகிக்க முடியாத காட்சிகளின் கோர்வையாக படத்தை இயக்கி மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார், இயக்குனர் ஸ்ரீசெந்தில். அனுமானிக்கவே முடியாத கிளைமேக்ஸ் காட்சி கைதட்டல் பெறும்.