சினிமா விமர்சனம்

தனுஷின் “கர” - சினிமா விமர்சனம்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி மாட்டிக்கொள்ளும் தனுஷ் மீது பொய் வழக்குகளை போட்டு பெயர் வாங்க நினைக்கிறார் போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சாரமூடு. இதையடுத்து சுராஜை தாக்கிவிட்டு தப்பிக்கும் தனுஷ், தனது காதல் மனைவி மமிதா பைஜூவுடன் ரேணிகுண்டாவில் ஒரு ஓட்டலில் வேலைபார்க்கிறார். கஷ்டம் அவரை துரத்தி துரத்தி அடிக்க சொந்தமாக ஓட்டல் வைக்க நினைக்கிறார்.

இதனால் தனது தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் நிலத்தை விற்று பணத்தை கேட்பதற்காக ஊருக்கு வருகிறார் தனுஷ். ஆனால் அவர்களின் நிலமே வங்கியில் அடமானமாக இருப்பது தெரியவர அதிர்ந்து போகிறார். ஒருகட்டத்தில் வங்கி அதிகாரிகள் நிலத்தை 'ஜப்தி' செய்ய வரும்போது, கே.எஸ்.ரவிகுமார் உயிரிழந்து போகிறார். சொந்த நிலத்திலேயே தந்தையின் உடலை அடக்கம் செய்யவிடாமல் வங்கி அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். திரும்பும் திசையெங்கும் பிரச்சினைகள் சுற்றி வளைக்க, சூழ்நிலைக் கைதியாகும் தனுஷ் எடுக்கும் அடுத்தக்கட்ட முயற்சிகள் என்ன? என்பதே கதை.

வழக்கம்போல ஆக்‌ஷன், எமோஷனல் என நடிப்பில் கலக்கியுள்ளார், தனுஷ். 'அப்பா மரணத்துக்கு காரணம் நான்தான்மா... என்னை மன்னிச்சிடு...' என்று தாயின் காலில் விழுந்து கெஞ்சும் காட்சி நெகிழ்ச்சி.

சில காட்சிகளே வந்தாலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார், மமிதா பைஜூ. அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாமே... எதார்த்தமான நடிப்பை காட்டி கலங்கடிக்கிறார், கே.எஸ்.ரவிகுமார். தனுசின் தாய்மாமாவாக வரும் கருணாசின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

சுராஜ் வெஞ்சாரமூடுவின் நடிப்பு மிரட்டல். தனுசை பிடிக்க அவர் காட்டும் வேகம் பரபரப்பு. ஜெயராம், பிரித்வி, ஸ்ரீஜாரவி, 'ஆடுகளம்' நரேன் என அத்தனை பேரின் நடிப்பிலும் சிறப்பு. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாசின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். எமோஷனல் காட்சிகளும் தாங்கிப் பிடிக்கின்றன. லாஜிக் மீறல்கள் ஏராளம். ஒரு வங்கியை அவ்வளவு எளிதில் கொள்ளையடித்து விட முடியுமா? போலீசாரும் அவ்வளவு எளிதில் நகர்ந்து போவார்களா என்ன? குறைகள் இருந்தாலும் திரைக்கதையின் ஓட்டம் அதை மறக்கடிக்கிறது.

படிப்பறிவில்லாத கிராம மக்கள் 'லோன்' என்ற பெயரால் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள்? என்பதை தைரியமாக சொல்லியதுடன், திருப்பமிக்க காட்சிகளுடன் எமோஷனல் கலந்த கமர்ஷியல் படைப்பை தந்திருக்கிறார், இயக்குனர் விக்னேஷ் ராஜா.