சென்னை,
தமிழகம் ஆந்திரா இடையேயான செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தப்பட்ட திரைப்படம்.
ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தலில் பெரிய கும்பல் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலுக்கு உறுதுணையாக சென்னையில் வசிக்கும் மம்முட்டி செயல்பட்டு வருகிறார். கடத்தப்படும் செம்மரக்கட்டைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் அமையும் புதிய அரசு செம்மரக்கட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறது இதற்காக சிறப்பு அதிரடி படையை உருவாக்குகிறது.
இந்த அதிரடிப்படைக்கு கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்படும் சாய் பல்லவி, தமிழக காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படையில் இருக்கும் தனுஷை தனது முக்கிய திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். அதன்படி மம்முட்டி கும்பலில் தனுஷ் இணைகிறார் மம்முட்டிக்கு நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார்.
இதற்கிடையில் துபாயில் இருக்கும் முக்கிய உள்ளியை கைது செய்வதற்காக காவல்துறை திட்டம் தீட்டுகிறது அதன்படி மம்முட்டி பதுக்கி வைத்திருக்கும் செம்மரக்கட்டைகளை தனுஷ் மூலமாக துபாய்க்கு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் துபாயில் இருக்கும் இந்த கடத்தல் கும்பலின் தலைவன் வெளிச்சத்துக்கு வருகிறார்.
இதையடுத்து ஒட்டுமொத்த கடத்தல் கும்பலை கைது செய்வதற்காக காவல்துறை பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறது. இந்தத் திட்டத்தில் அதிர்ஷ்டவசமாக மம்முட்டியின் தனுஷும் தப்பிவிட, எதிர்பாராத விதமாக தனுஷின் தந்தை இந்திரன்ஸ் மாட்டிக்கொள்கிறார். ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால் வெகுண்டெழும் தனுஷ் தன்னை நியமித்த காவல் படைக்கு எதிராகவே களமிறங்குகிறார். அதன்பிறகு என்ன ஆனது? யார் கை ஓங்கியது? என்பதே படத்தின் மீதி கதை.
ரகசிய உளவாளியாக தனுஷ் அசத்தி விட்டார். தனது குடும்பத்துக்கே தெரியாமல் ஒரு புதிய வாழ்க்கைக்கு தயாராகும் தனுஷ், படம் முழுக்க எதார்த்தமான நடிப்பை கொட்டி ஸ்கோர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் போலீசை விட மம்முட்டி கும்பலை மேல் என்ற முடிவுக்கு வரும் அவர் சூழ்நிலையை கையாளும் விதம் ஆச்சரியம். மீண்டும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை அள்ளியுள்ளார்.
75 வயதிலும் ஆச்சரியப்படும் நடிப்பை கொடுத்து படம் முழுக்க கவனிக்க வைத்துள்ளார் மம்முட்டி. ஆட்டம் பாட்டம் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் அனுபவம் நடிப்பை அள்ளிக் கொடுத்துள்ளார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக சாய்பல்லவி பொறுப்பான குடும்ப தலைவியாக ஸ்ரீலீலாவும் கவனம் இருக்கிறார்கள். நசுருதீன் ஷா, இந்திரன்ஸ், ரேணு தேசாய் என அத்தனை பேரும் பொருத்தமான தேர்வு.
எழில் அரசுவின் ஒளிப்பதிவும் சாய் அபயங்கரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான திரைக்கதை படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. சில காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வழக்கமான செம்மரக்கட்டை கடத்தல், போலீசார் நடவடிக்கை என்ற ரீதியில் கதை பயணித்தாலும், விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படம் முழுக்க கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இடைவேளையும், கிளைமாக்ஸ் காட்சியும் பரபரப்பின் உச்சம்.