சூனியக்காரி, தேவதை, மர்மக் கொலைகள், அறிவியல் ஆய்வுக்கூடம் என முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியிருக்கிறது ‘டிரோன்ஸ்’ படம்.
கல்லூரியில் படிக்கும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக் ஆகியோர் கல்லூரிக்கு தெரியாமல் வெளியே சுற்றி போலீசில் பிடிபடுகிறார்கள். இதையடுத்து மூன்று பேரையும் கல்லூரி நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்கிறது. 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மூன்று பேரும் தங்களது பெற்றோருக்கு பயந்து, 'பிளாக் ஹோல்' என்று சொல்லக்கூடிய ஒரு அறிவியல் ஆராய்ச்சி கூடத்தில் தங்குகிறார்கள். உள்ளே சென்ற மூன்று பேரும் வெளியே செல்ல முடியாமல் போகிறது.
இதையடுத்து அங்கிருக்கும் ஒரு டிரோன் கருவி மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது அங்கு சித்தி இத்னானியை கண்டுபிடிக்கிறார்கள். சித்தி இத்னானியை பார்த்ததும் காதலிக்க தொடங்கும் டிராவிட் செல்வம், அவரை நெருங்க பிரச்சினை வெடிக்கிறது. சித்தி இத்னானியின் சூனியக்கார பாட்டியான தேவதர்ஷினி, இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மூன்று பேரையும் சிறை பிடிக்கிறார்.
இதற்கிடையே காணாமல் போன மாணவர்களை தேடி அந்த பிளாக் ஹோல் பகுதிக்கு வரும் போலீஸ் அதிகாரியும் சித்தி இத்னானி அழகில் மயங்குகிறார். அவரும் பிரச்சினையில் சிக்குகிறார். இதன் பிறகு என்ன ஆனது? தேவதர்ஷினி பிடியில் இருந்து மாணவர்கள் தப்பித்தார்களா? சித்தி இத்னானி அழகின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே மீதி கதை.
அழகில் தேவதையாக மிளிர்கிறார், சித்தி இத்னானி. அவரது ஆக்ரோஷமான முகம் திருப்பம். இன்னொரு புறம் அழுத்தமான நடிப்பால் அலங்கரிக்கிறார், அஞ்சலி நாயர்.
டிராவிட் செல்வம், காமெடி கதாபாத்திரம் என்பதால் புகுந்து விளையாடியுள்ளார். அவரது நடிப்பு கலகலப்புக்கு கியாரண்டி. சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். அவரது நடிப்பு படத்துக்கு பலம்.
காவல் துறை அதிகாரி சினிமாவாலா சதீஷ், குரேஷி, ஆர்.ஜே.தீபக் மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரும் திறம்பட நடித்து ரசிக்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் கேமரா மூலம் வித்தை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆர்-ன் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசையும் சிறப்பு.
காமெடி பின்னணியில் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு கதையை சொல்லி, அதன் வழியே பல விஷயங்களை நம்மிடையே யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராகவ் மிர்தாத். கலகலப்புக்கு கியாரண்டியான படம்.