சினிமா விமர்சனம்

“ஈகோ ராமன்” - சினிமா விமர்சனம்

கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் ரோபோ சங்கர் நடிப்பில் வெளியான ‘ஈகோ ராமன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம்.

தன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் சிபி புவனச்சந்திரன். அவருக்கு கல்லூரி மாணவி கீர்த்தனா மீது காதல் வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள்.இந்த நிலையில், சிபி புவனச்சந்திரன் தன் பள்ளி காலத்தில் முன்மாதிரியாக நினைத்த ஆசிரியரான ரோபோ சங்கரை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சந்திக்கிறார். ஆனால் ரோபோ சங்கர் முற்றிலும் மாறுபட்டு தான் என்ற அகந்தையில் சுற்றுவது கண்டு அதிர்ச்சி அடைகிறார். சில சூழ்நிலை காரணமாக அவருக்கும், ரோபோ சங்கருக்கும் மோதல் முட்டிக்கொள்கிறது.

இதனால், ஆசிரியருக்கும் – மாணவருக்கும் இடையே மனதளவில் பெரும் யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தில் வென்றது மாணவரா? ஆசிரியரா?, அரசு தேர்வில் வெற்றி பெற்று அம்மாவின் கனவை சிபி புவனச்சந்திரன் நிறைவேற்றினாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக மீதி கதை நகர்கிறது.

அகந்தையின் உருவமாக வில்லத்தனத்தில் ரோபோ சங்கர் வெளுத்து வாங்கி இருக்கிறார். அவரது அழுத்தமான ஈகோ சூழ்ந்த நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. அதேவேளை இந்த படம் வெளியான சமயம் அவர் உயிருடன் இல்லையே என்று மனம் வருத்தம் கொள்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிபி புவனச்சந்திரன், அம்மாவின் கனவை நிறைவேற்ற போராடும் ஒரு சாதாரண குடும்ப இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். காதல், எமோஷனல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

எளிமையான தோற்றம் இயல்பான நடிப்பு என பக்கத்து வீட்டு பெண் போல கவர்கிறார் கீர்த்தனா. கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஜினோ பாபு ஒளிப்பதிவும், ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது.எளிமையான கதைக்களமும், இயல்பான நடிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அகந்தை என்ற குணம் ஒருவரது வாழ்வில் எப்படி எல்லாம் எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லி, எதார்த்தமான படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேசன் நாச்சிமுத்து.