நெசவுத் தொழிலாளியான கஸ்தூரிராஜா, தொழில் நலிவடைந்து வருவதால் பாதிக்கப்படுகிறார். ஆனாலும் நெசவுத் தொழிலில் தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்தசூழலில் கஸ்தூரி ராஜாவின் மகன் ஈஷா 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைகிறார். இதையடுத்து அவரை வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்ப குடும்பத்தினர் யோசிக்கிறார்கள். வெளிநாடு சென்றால் உள்ளூரில் உள்ள தனது பள்ளி காதலியான மாளவிகா மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதால் அந்த வெளிநாட்டு வாய்ப்பை தவிர்த்து, சொந்த ஊரிலேயே சாதாரண வேலை செய்து வருகிறார் ஈஷா.
இதற்கிடையே தனது காதலை மாளவிகா மனோஜிடம் ரகசியமாக சொல்ல செல்லும் ஈஷா அப்பகுதிவாசிகளிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு ஈஷா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கிறார்கள். அந்த சிக்கல்கள் என்ன? ஈஷா குடும்பத்தினர் அதிலிருந்து மீண்டார்களா என்பதை உணர்வுபூர்வமான மீதி கதை.
நெசவுத் தொழிலாளியாக கஸ்தூரிராஜா வாழ்ந்திருக்கிறார். நெசவுத் தொழிலில் ஏற்படும் கஷ்டங்களை உணர்வுபூர்வமான நடிப்பில் அவர் வெளிப்படுத்தும் காட்சி அருமை. எதார்த்தமான நடிப்பால் படம் முழுவதும் அசத்துகிறார் ஈஷா. காதல் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார்.
பெரிய அளவில் வசனம் பேசாவிட்டாலும், கண்கள் மூலமாகவும் முகபாவனைகள் மூலமாகவும் மாளவிகா மனோஜ் பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார். படத்தின் இறுதியில் வெளிநாட்டு வேலை குறித்து அவர் பேசும் இடங்கள் கைதட்டு பெறுகிறது.
தனாஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜான், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமனன், இஸ்மத் பானு, மலர் கய்சன், சன் சாகுல், மாஸ்டர் தீகன், தீக்ஷா ஸ்ரீ ஆகியோர் பொருத்தமான தேர்வு.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு கதையுடன் ஒன்ற வைக்கிறது. சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான மெலோடியாக பயணிக்கிறது. இரைச்சல் இல்லாத எதார்த்தத்தை தழுவும் நேர்த்தியான பின்னணி இசை பாராட்டுக்குரியது. உணர்வுபூர்வமான காட்சிகள் பலம். இரண்டாம் பாதியில் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
80-காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சூழலை அப்படியே பிரதிபலித்து, சொல்ல வந்த கருத்தில் சமரசம் இல்லாமல் காட்சிகளை நகர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் மீரா கதிரவன். எளிமையான எதார்த்தமான வாழ்வியல் படம்.