சினிமா விமர்சனம்

ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்' படம் எப்படி இருக்கு? - சினிமா விமர்சனம்

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் எக்ஸ்'.

'மிஸ்டர் எக்ஸ்' சினிமா விமர்சனம்:

இந்தியாவின் உளவுப்பிரிவான 'ரா'-வில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக இமயமலையில் பாதுகாத்து வருகிறார். அவரை கைது செய்யும் ரஷியா ராணுவத்தினர், அவர் பாதுகாத்து வந்த மூலப்பொருளையும் கைப்பற்றுவதோடு, அதை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். சரத்குமாரையும், அந்த அணு ஆயுத மூலப்பொருளையும் கைப்பற்ற அதிகாரி மஞ்சு வாரியர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிய, அவர் கைது செய்யப்படுகிறார்.

இதையடுத்து சென்னையில் அவரது தலைமையில் செயல்படும் ஆர்யா தனது நண்பர்களுடன் ரஷியா வரை சென்று போராடி அணு ஆயுத மூலப்பொருளை மீட்டு இந்தியா கொண்டு வருகிறார். அப்போது கவுதம் ராம் கார்த்திக் துப்பாக்கி முனையில் அந்த மூலப்பொருட்களை அவரிடம் இருந்து கடத்திச் செல்கிறார்.

இதையடுத்து கவுதம் ராம் கார்த்திகை வீழ்த்தி அணு ஆயுத மூலப்பொருட்களை மீட்க ஆர்யா சபதம் ஏற்கிறார். அது நடந்ததா, இல்லையா? என்பதே மீதி கதை. கட்டுக்கோப்பான உடல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் தன்னை திறமையான உளவாளியாக வெளிக்காட்டியிருக்கிறார் ஆர்யா. மிடுக்காக வரும் சரத்குமாரும் தன் பங்குக்கு ஆக்‌ஷன் - அதிரடியில் கலக்கியுள்ளார். அவரது திருப்பம் எதிர்பாராதது.

உளவாளியாக அறிமுகமாகி வில்லனாக மிரட்டும் கவுதம் ராம் கார்த்திக், அட்டகாசப்படுத்தி இருக்கிறார். வில்லத்தினத்தில் புதிய பரிமாணம் காட்டியுள்ளார். ரா அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியரும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனகா, ஜெயப்பிரகாஷ் என அனைவரின் நடிப்பும் சிறப்பு.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவும், திபு நிணன் தாமசின் இசையும் கலக்கல். பரபரப்பான திருப்பம் நிறைந்த காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம். இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து, கமர்ஷியல் ரீதியான படமாக கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்.

'மிஸ்டர் எக்ஸ்' டிரைலர்: