சினிமா விமர்சனம்

"மைலாஞ்சி" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

அஜயன் பாலா இயக்கிய "மைலாஞ்சி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஒரு முக்கோண காதல் கதை

ஊட்டிக்கு வரும் வனவிலங்கு புகைப்பட கலைஞரான ஸ்ரீராம் கார்த்திக், அங்கு பறவைகள் பூங்கா நடத்தி வரும் கிரிஷா குரூப்பை சந்தித்து காதல் கொள்கிறார். ஆனால் கிரிஷா ஏற்கனவே காதலில் தோல்வி கண்டவர் என்பது தெரியவருகிறது. கிரிஷாவின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் ஸ்ரீராம் கார்த்திக், அது விளையாட்டு காதல் என்று தெரிந்து கொள்கிறார். இதற்கிடையில் ஸ்ரீராம் கார்த்திக்கை உண்மையாக காதலிக்க தொடங்குகிறார் கிரிஷா.

இந்த சூழலில் கிரிஷாவை காதலித்த வாலிபர் மீண்டும் ஊட்டிக்கு வந்து அவரது பெற்றோரிடம் விஷயத்தை கூறி திருமணமும் நிச்சயமாகிறது. அடுத்து என்ன ஆனது? யாருடைய காதல் வெற்றிபெற்றது? என்பதே மீதி கதை.

எதார்த்த நடிப்பால் ஸ்ரீராம் கார்த்திக் கவர்கிறார். காதல் காட்சிகளில் பரிதாபம் அள்ளுகிறார். வெகுளித்தனமான நடிப்பால் கிரிஷா குரூப் கவனிக்க வைக்கிறார். அவரை சுற்றியே நகரும் இந்த கதையில், அவரது கதாபாத்திரத்தை அழுத்தமாக வடிவமைத்திருக்கலாம்.

முனிஷ்காந்த், சிங்கம்புலியின் காமெடிக்கு லேசாக சிரிக்க முடிகிறது. கலையரசன் கன்னுசாமி, செந்தி உள்ளிட்டோரின் நடிப்பில் குறையில்லை. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், இளையராஜாவின் இசை ரசிக்க முடிகிறது. செழியன் ஒளிப்பதிவில் 'மலைகளின் ராணி' மிடுக்காய் தெரிகிறாள்.

உணர்வுப்பூர்வமான காட்சிகள் பலம் என்றாலும், இந்த காலகட்டத்துக்கு ஏற்ப அதை கொடுக்கத் தவறிவிட்டார்கள். வலுவான திரைக்கதை இல்லா ததால், காட்சிகளில் புதுமையை எதிர்பார்க்க முடியவில்லை. சில காட்சிகள் நாடகத்தனமாக நகர்கிறது.

வழக்கமான காதல் கதை என்றாலும், அதில் உணர்வு ரீதியான காட்சிகளை அடுக்கி ஓரளவு கவனிக்க வைத்திருக்கிறார் அஜயன் பாலா. முதல் முயற்சிக்கு பாராட்டு.

மைலாஞ்சி -சிவக்கவில்லை

SCROLL FOR NEXT