சினிமா விமர்சனம்

கவனிக்க வைக்கும் படைப்பு... 'இ1' - சினிமா விமர்சனம்

சதா - மோனிகா செலினா இயக்கத்தில் 'இ1' திரைப்படம் வெளியாகி உள்ளது.

'இ1' சினிமா விமர்சனம்

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு கொலை அரங்கேறுகிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் இருக்கும் வீட்டில் எதிர்பாராத சூழ்நிலையில் ஒரு பெண் சிக்கிக்கொள்கிறாள். அங்கிருந்து படம் கடந்த காலத்திற்கும், அந்தக் கொலையின் பின்னணிக்கும் நகர்கிறது.

எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்ற கேள்விதான் படத்தின் கதை. அதற்கான விடையைத் தேடும் பயணத்தில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பான விஷயங்களை கதைக்குள் சொல்லியிருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சதா நாடார் குமார் தனது பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் செலினா இயல்பான நடிப்பால் அலங்கரிக்கிறார். இருவரும் நிஜ வாழ்க்கையிலேயே தம்பதி என்பதால் காதல், எமோஷனல் உள்ளிட்ட இடங்களில் நன்றாகவே கெமிஸ்ட்ரி செட் ஆகிறது.

பாண்டி, பேபிஷிவ், சுந்தரம் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இ.ஜே. ஜான்சனின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. எம்.எஸ்.மனோகுமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்துப் பேசும்போது பொதுவாக குட் டச், பேட் டச் என்ற வார்த்தைகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதைக் கடந்து, தேவையற்ற எந்தத் தொடுதலுக்கும் இடமளிக்கக் கூடாது என்ற தெளிவை உருவாக்க வேண்டும் என்பதை படம் வலியுறுத்துகிறது. குழந்தையை மையமாகக் கொண்டிருக்கும் கதையில் பிரச்சினையின் தீவிரத்தை கதையின் வழியாக உணர்த்த முயற்சி செய்திருக்கிறார்கள். தேவையற்ற காட்சிகள் இடம்பெறாமல் இருந்ததற்கு பாராட்டலாம்.

சொல்ல வந்த கருத்தை திசை திருப்பாமல், கமர்ஷியல் கலவையின்றி 75 நிமிடங்களில் படமாக சொல்லி முடித்ததற்காகவே நடிப்பு தாண்டி இயக்கத்தில் கவனம் ஈர்த்த சதா - மோனிகா செலினா தம்பதியை பாராட்டலாம். கவனிக்க வைக்கும் படைப்பு.

'இ1' டிரைலர்

SCROLL FOR NEXT