சினிமா விமர்சனம்

எளியவர்களுக்கு மறுக்கப்படும் நீதி: “நிழல்” - சினிமா விமர்சனம்

ஏ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன் நடிப்பில் வெளியான ‘நிழல்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

மனித உயிர்களை காப்பாற்றும் டாக்டராக மிளிர்கிறார், ஜனனி. இதற்கிடையில் பிரபல தொழில் அதிபரின் மகன் விஜய் மற்றும் அவர்களின் நண்பர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார். இதில் அவர்கள் தப்பி விடுகிறார்கள். இதையடுத்து ஜனனியை பழிவாங்க காவல்துறையினர் மூலம் தொழில் அதிபரின் குடும்பத்தார் முயற்சி எடுக்கிறார்கள். போலீசார் விசாரணையில் ஜனனி பற்றிய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. ஜனனி யார்? டாக்டரான அவர் கொலைக்கு துணிந்த காரணம் என்ன? இதன் பின்னணி தான் என்ன? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதி கதை.

இதுவரை சாந்தமான நடிப்பை வழங்கி வந்த ஜனனி, முதன்முறையாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அவரது நடிப்பும், கோபமான பார்வையும் சிறப்பு. உணர்ச்சி பிழம்பான அவரது நடிப்புக்கு பாராட்டு.

காவல்துறை அதிகாரியாக வரும் விசாகன் எதார்த்த நடிப்பை கொட்டியிருக்கிறார். வில்லனாக வரும் ஹரி விஜய் நடிப்பு மிரட்டல்.

கவுசிக்கின் கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனை. அபிஷேக் சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை.

மோகன்குமாரின் ஒளிப்பதிவும், எம்.அபுபக்கரின் இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது. விறுவிறுப்பான திரைக்கதை பலம். சில காட்சிகள் யூகிக்க முடிகிறது.

பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும், அவர்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைத்து தான் ஆகவேண்டும் என்ற கருத்தில் சமரசமற்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ஏ.கே.குமார். சுவாரஸ்யமான கிரைம் - திரில்லர்.