கேரளாவில் இருந்து அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு தனது மகளை அழைத்து வருகிறார் இந்திரன்ஸ். வந்த இடத்தில் 60 பவுன் நகை தொலைந்து போக போலீசாரிடம் செல்லும் அவருக்கு, பல சோதனைகளை போலீசார் தருகிறார்கள். இறுதியில் நகையை மீட்க வழக்கு தொடரும் இந்திரன்ஸ், அங்கு வக்கீல் ஆர் ஜே பாலாஜி பிடியில் சிக்கி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார். ஒரு கட்டத்தில் தனது நகை திரும்ப வராது என்ற விரக்தியில் கோர்ட் வளாகத்தில் உள்ள கருப்பசாமியின் சிலைக்கு மிளகாய் அரைத்து பூசி கதறி அழுகிறார்.
தன்னை நாடி வந்த பக்தனின் கோரிக்கையை ஏற்று கருப்பசாமியாக வரும் சூர்யா, ஆர் ஜே பாலாஜி மற்றும் அவரது கூடாரத்தை அடித்து நொறுக்குகிறார். அப்போது கடவுள் சூர்யாவிடம், கோர்ட்டில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் சாத்தியம் ஆகாது.. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு கடவுளான நீ காசு கொடுக்காமல் போராடி இந்த வழக்கை வென்று பார்... என்று சவால் விடுகிறார் ஆர் ஜே பாலாஜி. இந்த சவாலை ஏற்கும் சூர்யா கருப்பசாமியாக இல்லாமல் ஒரு சாதாரண வக்கீலாக கோர்ட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க போராடுகிறார். அதன் பிறகு என்ன ஆனது? என்பதுதான் பரபரப்பான மீதி கதை
கருப்பசாமியாக ஒருபுறம் ஆக்ரோஷம். இன்னொரு புறம் வக்கீலாக போராட்டம் என்று மாறுபட்ட நடிப்பால் புகுந்து விளையாடி இருக்கிறார் சூர்யா. கருப்பசாமியாக அவர் வரும் இடங்கள் அனைத்தும் சிலிர்ப்பு. சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியுள்ளார்.
வக்கீலாக வரும் திரிஷா அழகாலும், அளவான நடிப்பாலும் அசத்துகிறார். காசு பார்க்கும் வக்கீலாக ஆர்.ஜே பாலாஜி மிரட்டுகிறார். அவரது டைமிங் காமெடியும் நக்கலும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.
நட்டி நடராஜன், சுவாசிகா, சிவதா, ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் என அனைவருமே அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவும், சாய் அபயங்கரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்க்கின்றன.
கோர்ட்டில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதுடன், கருப்பசாமி என்ற கிராமத்து தெய்வத்தின் நம்பிக்கையும் தூவி கமர்சியல் மசாலா கலந்து படத்தை எடுத்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. கிராபிக்ஸ் காட்சிகள் சிலிர்ப்பு.