சினிமா விமர்சனம்

“கருப்பு பல்சர்” திரைப்பட விமர்சனம்

இயக்குனர் முரளி கிரிஷ் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள “கருப்பு பல்சர்” படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஆர்.ஓ. பியூரிபையர் வாட்டர் விற்பனை செய்து வரும் 'அட்டகத்தி' தினேஷ், மேட்ரிமோனியில் மணமகள் தேவை விளம்பரம் கொடுக்கிறார். அதன்படி வரும் அழைப்பை ஏற்று ரேஷ்மாவை சந்திக்கிறார். இருவரும் பழகுகிறார்கள். காதலிக்கிறார்கள்.

காதலிக்கும்போது, தன்னிடம் கருப்பு பல்சர் இருப்பதாக ரேஷ்மாவிடம் பொய் சொல்கிறார் தினேஷ். அந்த பைக்கில் செல்லவேண்டும் என்று ரேஷ்மா ஆசைப்பட, வேறுவழியின்றி பழைய கருப்பு பல்சர் ஒன்றை விலைக்கு வாங்குகிறார்.

அந்த பைக்கை வாங்கியதில் இருந்து தினேசை சுற்றி அமானுஷ்ய விஷயங்கள் அரங்கேறுகின்றன. ஒருகட்டத்தில் அந்த பைக்கில் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் ஆவி புகுந்திருப்பது தெரியவர தினேஷ் அதிர்ந்து போகிறார்.

அந்த பைக்கில் காளையின் ஆவி புகுந்த கதை என்ன? அந்த பைக் தினேசிடம் வந்தது எப்படி? இதன் பின்னணிதான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

சென்னைக்கு ஏற்ற வாலிபராக, பட்ஜெட் போட்டு வாழும் வாலிபராக எதார்த்த நடிப்பால் கலக்கி இருக்கிறார் தினேஷ். ஜல்லிக்கட்டு வீரராக களமிறங்கும் காட்சிகளிலும் காளையை போல சிலிர்ப்பூட்டுகிறார். 'ரிஸ்க்' எடுத்து அவர் நடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

அலட்டல் இல்லாத அழகால் ரேஷ்மா வெங்கடேஷ் கவருகிறார். காமெடி வில்லனாக மன்சூர் அலிகான் தெறிக்க விட்டுள்ளார். மதுநிகா, சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இன்பாவின் இசையும், பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. படத்துடன் ஒன்றவும் செய்கிறது. பரபரப்பான காட்சிகள் பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது.

வழக்கமான கதை தான் என்றாலும், புதுமையான காட்சிகள் மூலம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் முரளி கிரிஷ் எஸ். பைக்கில் காளையின் ஆவி புகுந்தது வித்தியாசமான முயற்சி.