சென்னை,
அரசு ஆஸ்பத்திரி டாக்டரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணரான அனுமோலும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். நல்ல தம்பதி என்று அனைவரும் பாராட்டும் வகையில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு செல்லும் குருசோமசுந்தரம் அங்கு ஒரு காதல் ஜோடியை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதே அதிர்ச்சியுடன் நாடு திரும்பும் குருசோமசுந்தரம் தனது மனைவியிடம், நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை சொல்லி வேதனைப்படுகிறார்.
தனது கணவர் இப்படிப்பட்ட நபரா? என்று ஆத்திரம் கொள்ளும் அனுமோல், அவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். ஆனந்த தம்பதியராக வாழ்ந்த தனது அப்பாவும், அம்மாவும் பிரிந்த தகவல் அறிந்து அவர்களின் மகள் வெளிநாட்டில் இருந்து விரைந்து வருகிறார். அதேவேளை இவர்களை ஒன்று சேர்க்க பாரிசில் இருந்தும் அந்த காதல் ஜோடி விரைகிறார்கள். இறுதியில் என்ன நடந்தது? காதல் ஜோடி யார்? குருசோமசுந்தரம் அனுமோல் பிரிவின் பின்னணி என்ன? குருசோமசுந்தரம் மறைத்து வைத்த அந்த ரகசியம் தான் என்ன? என்பதே மீதி கதை.
குருசோமசுந்தரம் அளவான நடிப்பை காட்டி ஸ்கோர் செய்துள்ளார். குடும்பத்துக்காக எதையும் செய்ய துணியும் அவரது நடிப்பு, எதார்த்தவா தியாக பளிச்சிட வைக்கிறது. அனுமோலும் இயல்பான நடிப்பால் படம் முழுக்க அலங்கரித்துள்ளார். எதார்த்த நடிப்பை உதிர்த்து ரசிக்க வைக்கிறார்.
விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி, நயனா சாய், பிபின் உள்பட அனைவருமே பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார்கள்.
ஜி.சதீஷின் ஒளிப்பதிவில் காட்சிகளில் அழகு. கேவின் இசையில் பாடல்கள் ரசிப்பு.
வித்தியாசமான கதைக்களம் படத்துக்கு பலம். சில காட்சிகள் யூகிக்க முடிகிறது. கிளைமேக்சில் படத்தை முடிக்கவேண்டுமே என்ற அவசரம் காட்சிகளில் தெரிகிறது. திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம். சில காட்சிகளில் எமோஷனல் மிஸ்ஸிங்.
ஆணவப் படுகொலையும், அதன் பின்னணி பற்றியும் பேசும் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான பாணியில் கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார். இயக்குனர் சரஜ் சீலன்.
"பாரிஸ் கபே சரக்கு கம்மி"