சினிமா விமர்சனம்

“லவ் ஓ லவ்” - சினிமா விமர்சனம்

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா நடிப்பில் வெளியான ‘லவ் ஓ லவ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

தனுசின் மருமகன் பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம்.

சம்பாதிக்கும் பணத்தை தனது அப்பாவிடம் கொடுத்து ஆச்சரியமான இளைஞனாக வாழ்ந்து வருகிறார் பவிஷ். இதற்கிடையில் நாக துர்காவுடன் அவருக்கு காதல் மலர்கிறது. நாகதுர்காவின் ஆடம்பர செலவுகளால் அல்லல் பட்டுப்போகும் பவிஷ், ஒரு கட்டத்தில் அவரை பிரிய முடிவு எடுக்கிறார். ஆனால், நாக துர்கா பவிஷ்தான் தனக்கு ஏற்றவர் என்ற முடிவில், அவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நாக துர்வாவின் விருப்பத்தை நிறைவேற்ற பவிஷ் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதன்படி, நான்கு வருடங்களாக ஒரு காதலனாக தான் செய்ததை, அவர் தனக்கு நான்கு மாதங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் அவரை திருமணம் செய்துகொள்வதாகவும், இல்லாவிட்டால் பிரிவு முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனையை ஏற்று ஆண்களின் உலகத்துக்குள் பயணப்பட முடிவு செய்யும் நாக துர்கா, நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்து பவிஷை கரம் பிடித்தாரா? முடியாமல் பிரிந்தாரா? என்பதே கலகலப்பான மீதி கதை.

நடனம் மற்றும் நடிப்பில் தன்னை நிரூபித்துள்ளார், பவிஷ். பொறுப்பில்லாமல் இருக்கும் காதலி மீது கோபப்படும் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். பல இடங்களில் தனுசின் சாயல் தெரிகிறது.

புதுமுக நடிகை நாக துரகா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருக்கிறார். கதாபாத்திரத்தில் பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் என அனைவரும் சிறப்பான நடிப்பால் கவருகிறார்கள்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. பாக்ஸன் இசை படத்துடன் ஒன்றை வைக்கிறது. கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.

எதார்த்தமான காதல் கதையில் கமர்ஷியல் அம்சங்கள் சேர்த்து குடும்பங்கள் ரசிக்கும்படியான காதல் படைப்பை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன்.