சினிமா விமர்சனம்

“மவுன மொழிகள்” திரைப்பட விமர்சனம்

இயக்குனர் ஏ.சி.சவுந்தர் இயக்கிய “மவுன மொழிகள்” படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

விளம்பர நிறுவனம் நடத்தி வரும் ஷாகீர் மனோ, மாடல் அழகியான அர்ச்சனாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு உதவி செய்ய வரும் திவ்யா நாகேஷ், ஒருகட்டத்தில் ஷாகீரை காதலிக்க தொடங்குகிறார். ஒருகட்டத்தில் ஷாகீரும், அர்ச்சனாவும் காதலில் ஒன்றுசேர, இந்த காதல் பயணத்துக்கு முட்டுக் கட்டை போட துடிக்கிறார் திவ்யா. அதேவேளை பல்வேறு பிரச்சினைகளை தாண்டி ஷாகீர் அர்ச்சனா திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்துகொண்டிருக்கிறார்கள். திருமணத்தை நிறுத்த திவ்யா துடிக்கிறார்.

இந்த சூழலில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஷாகீர் - அர்ச்சனாவுக்கு ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன ஆனது? இந்த திருமணம் கைகூடியதா? திவ்யாவின் சதி திட்டம் பலித்ததா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாகீர் மனோ (பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்), குழந்தை தனமான நடிப்பால் கவர்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீமன், குறைவான காட்சிகளே வந்தாலும் நினைவில் நிற்கிறார். கதாநாயகிகளாக நடித்திருக்கும் அர்ச்சனாவும், திவ்யா நாகேசும் பொறுப்பான நடிப்பால் பிரகாசிக்கிறார்கள். குறிப்பாக கலங்கடிக்கும் நடிப்பால் அர்ச்சனா 'ஸ்கோர்' செய்திருக்கிறார்.

அர்ஜூனன், விஜய் கணேஷ் கூட்டணி ஓரளவு சிரிக்க வைக்கிறார்கள். தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி உள்ளிட்டோரின் அனுபவ நடிப்பும் கைக்கொடுத்திருக்கிறது.

எம்.ஜி.ராய் ஒளிப்பதிவில் காட்சிகளும், இளந்திரையன் இசையில் பாடல்களும் ஓகே ரகம். உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். பல காட்சிகளை யூகிக்க முடிகிறது. சில இடங்களில் நாடகத்தனமாக காட்சிகள் நகருகிறது. கிளைமேக்ஸ் காட்சி திருப்பம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அழகின் மீதான ஈர்ப்புக்கும் உண்மையான அன்புக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பேசும் காதல் படைப்பாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ஏ.சி.சவுந்தர்.

மவுன மொழிகள் - இன்னும் புரிய வைத்திருக்கலாம்.

SCROLL FOR NEXT