சென்னை,
ஊருக்கு ஒதுக்குபுறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை கிடக்கிறது. போலீசார் நாலாபுறமும் தேடியும் உடல் கிடைக்காததால், சிக்கல் எழுகிறது. வெட்டப்பட்ட தலையுடன் ஒரு கடிதமும், லட்சக்கணக்கில் பணமும் கிடக்கிறது. அந்த கடிதத்தில், 'என் தலையை அடக்கம் செய்து, பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதி யார்? என்ற விசாரணையை தொடங்குகிறார்கள். ஊர் ஊராக சென்று விசாரிக்கும் போலீசாரின் விசாரணையில் விஜய் சேதுபதி பற்றி பல தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன. பல அதிர்ச்சிகரமான உண்மைகளும் வெளிச்சத்துக்கு வருகிறது. விஜய் சேதுபதி யார்? அவரது கொலைக்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு விடையாக நகருகிறது மீதி கதை.
படம் முழுக்க ஒன் மேன் ஆர்மியாக வந்து, எதார்த்த நடிப்பால் பலம் சேர்த்துள்ளார், விஜய் சேதுபதி. நடை, உடை, பாவணை என அசத்துகிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் காட்டும் விதவிதமான நடிப்புக்கு கைதட்டல் நிச்சயம். ஆங்கிலத்தில் கலக்கும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாரின் நடிப்பு அசத்தல். போலீஸ்காரர்களாக வரும் சிங்கம் புலி, வடிவேல் முருகனும் ரசிக்க வைக்கிறார்கள். ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நட்சத்திரா, சாதனா என அனைவருமே நடிப்பில் கலக்கியுள்ளனர்.
என்.மது, என்.சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவும், ராஜேஷ் முருகேசனின் இசையும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். தேவையற்ற காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை, பல்வேறு திருப்பங்கள் நிறைந்த கதைக்களமாக இயக்கி, நம்மை கவனிக்க வைத்து அசத்தியுள்ளார்கள் இயக்குனர் எம்.மணிகண்டன் மற்றும் பி.அஜித்குமார்.