சினிமா விமர்சனம்

ஒவ்வொரு காட்சியிலும் மர்மம்... ‘பனி விழும் இரவு’ திரைப்பட விமர்சனம்

இயக்குனர் செ.ரா.ராஜேஷ் இயக்கிய ‘பனி விழும் இரவு’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சினிமா செய்திப்பிரிவு

சென்னை,

புதுமண தம்பதியான அருண் கார்த்திக்கும், எனாக்‌ஷி கங்குலியும் விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். இதற்கிடையில் தனது மனைவியை காணவில்லை என்று கொடைக்கானல் போலீசில் அருண் கார்த்திக் புகார் தருகிறார். சிலர் விடுதி அறையை உடைத்து என் மனைவியை அடித்து இழுத்துச் சென்றுவிட்டார்கள். அவரை மீட்டுத்தர வேண்டும் என்று போலீசிடம் கெஞ்சுகிறார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்குகிறார்கள். ஒரு சாதாரண புகார் என்று தொடங்கும் இந்தச் சம்பவம், பல கேள்விகளை எழுப்பும் மர்மமாக மாறுகிறது. அதன்பிறகு என்ன ஆனது? எனாக்‌ஷி கங்குலி கிடைத்தாரா? அவரை கடத்திச் சென்றது யார்? போலீசார் உண்மையை கண்டுபிடித்தார்களா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

அருண் கார்த்திக் எதார்த்தமான நடிப்பில் கவருகிறார். காணாமல் போன மனைவியை மீட்டுத்தரக்கோரி போலீசிடம் அவர் கெஞ்சும் இடங்களில் அனுதாபம் அள்ளுகிறார். எனாக்‌ஷி கங்குலி நடிப்பில் இன்னும் மேம்பட வேண்டும். ஆனாலும் ஓரளவு தனது வேலையை செய்ய முயற்சிக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் கம்பீரமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். விசாரணையில் அவர் உண்மையை கண்டறியும் அத்தனை இடங்களில் ரசிக்க வைக்கிறது. கஜராஜின் நடிப்பு திருப்பம். அதேபோல சரவண சக்தி, செ.ரா.ராஜேஷ், சுருளி, உமர், வினோத் உள்ளிட்ட இதர நடிகர் - நடிகைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளனர்.

ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவும், சதாமுருகன் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பரபரப்பான காட்சிகள் பலம். சில காட்சிகள் இன்னும் புதுமையாக இருந்திருக்கலாம்.

எது எப்படியோ, பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்ட திரைக்கதையில் ரசிக்கும்படியான காட்சிகளை நகர்த்தி படத்தில் நம்மை ஒன்ற செய்திருக்கிறார் இயக்குனர் செ.ரா.ராஜேஷ். கிளைமேக்ஸ் யூகிக்க முடியாத திருப்பம்.

SCROLL FOR NEXT