சினிமா விமர்சனம்

“நீ பாரெவர்” - சினிமா விமர்சனம்

அசோக்குமார் இயக்கத்தில் சுதர்ஷன் கோவிந்த் நடித்துள்ள ‘நீ பாரெவர்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சுதர்சன் கோவிந்த், தனது தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனின் கண்டிப்பான வளர்ப்பில் வளருகிறார். பெரிய ஆப் (செயலி) டெவலப்பர் ஆக முயற்சிக்கும் சுதர்சன் கோவிந்த், காதலர்களுக்கான ஒரு ஆப் உருவாக்குகிறார். ஆனால் அவருக்கு காதல் அனுபவம் இல்லாததால், அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. இன்னொருபுறம் சினிமாவில் இயக்குனராக முயற்சிக்கும் அர்ச்சனா ரவிக்கு, 'அட்டகாசமான காதல் கதையுடன் வந்தால் படம் பண்ணலாம்' என தயாரிப்பாளர் சொல்லிவிடுகிறார். இதனால் நல்ல காதல் கதையை தேடுகிறார்.

எதிர்பாராத சூழலில் சுதர்சன் கோவிந்தும், அர்ச்சனா ரவியும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு அவர்கள் வாழ்வில் என்னென்ன திருப்பங்களை உண்டாக்கியது. இருவரிடையே காதல் மலர்ந்ததா, இருவரது கனவுகளும் நிஜமானதா? என்பதே மீதி கதை.

எதார்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கும் சுதர்சன் கோவிந்த், காதல் மற்றும் கலாட்டா காட்சிகளிலும் கவருகிறார். அர்ச்சனா ரவி அழகான கதாநாயகியாக மனதில் தங்குகிறார். எமோஷனல் காட்சிகளில் 'ஸ்கோர்' செய்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் அனுபவ நடிப்பும் கைகொடுத்திருக்கிறது. பிரது, நோபல் ஜேம்ஸ், வித்யா, நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெதிகா சீனிவாஸ் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக நகருகிறது. அஷ்வின் ஹேமந்த் இசை ரசிக்க வைக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. புதுவிதமான காதலை சொன்னதற்கு பாராட்டலாம்.

காதலை கேட்டோ, பார்த்தோ உணர முடியாது. அதை அனுபவித்தே உணர முடியும் என்ற ரீதியில் புதிய கதைக்களத்தில் நம்மை ரசிப்புடன் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி.