சினிமா விமர்சனம்

'பூக்கி' திரைப்பட விமர்சனம்

கணேஷ் சந்திரா இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளியான 'பூக்கி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சமூக வலைதளங்களில் அன்பானவர்களை அழைக்கும் வார்த்தை 'பூக்கி'

பூக்கி காதல் ஜோடியான அஜய் திஷானும், தனுஷாவும் அவ்வப்போது காதலும், மோதலுமாக இருக்கிறார்கள். இதற்கிடையில் சாதாரண எழும் ஒரு பிரச்சினை இருவரிடையே பெரும் பிளவை ஏற்படுத்த, இருவருமே பிரிகிறார்கள். காதல் பிரிவு சோகத்தில் இருந்து தப்பிக்க இருவரும் பல முயற்சிகளில் இறங்கி பார்க்கிறார்கள். அவை அனைத்துமே தோல்வியில் முடிகிறது.

இதையடுத்து இருவருமே வேறு ஒரு காதலை நோக்கி பயணிக்கிறார்கள். பழைய காதல் கசந்ததா? புதிய காதல் இனித்ததா? இறுதியில் என்ன ஆனது? என்பதே கதை.

துடிப்பான நடிப்பால் கவரும் அஜய் திஷான், நிகழ்கால இளைஞரின் வலியையும், வேதனையையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக நடித்துள்ளார். காதல் வலியை எடுத்துக்காட்டும் இடங்களில் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். அழகாலும், நடிப்பாலும் தனுஷா 'ஸ்கோர்' செய்துள்ளார். நடனத்திலும் 'ஸ்கோர்' செய்கிறார். நல்ல எதிர்காலம் உண்டு.

பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக்பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்துக்கு சரியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் இசை ரசிக்க வைத்தாலும், இன்னும் இருந்திருக்கலாமே... என்று எண்ணத் தோன்றுகிறது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் குறையில்லை. காதலின் வலியை சொல்லும் காட்சிகளும், எதார்த்த நிகழ்வுகளும் பலம். புதுமையான காட்சிகள் இருந்திருக்கலாம்.

காதலின் வலியையும், வேதனையையும் இந்தக்கால இளைஞர்களின் மனநிலைக்கு ஏற்ப காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கணேஷ் சந்திரா.