2040-ம் ஆண்டில் நடக்கும் இந்த கதையில் “எல்.ஐ.கே” என்ற புதிய செயலியை காதலர்களுக்காக உருவாக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த செயலி மூலம் தங்களுக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதுடன், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை உடனுக்குடன் காதலர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த செயலிக்கு வரவேற்பு பெருகுகிறது. காதலர்கள் தாண்டி அனைவரும் இந்த செயலை இருந்தால் தான் மதிப்பு என்ற நிலைக்கு வருகிறார்கள்.
அதே வேலை செல்போன் இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் பயணிக்கும் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டியை பார்த்து காதல் வயப்படுகிறார். அவருக்காக செல்போன் வாங்கி எல்.ஐ.கே. செயலியை டவுன்லோட் செய்து கொள்கிறார். நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர எல்.ஐ.கே. செயலி மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்படுகிறது. அவருக்கும் கீர்த்தி செட்டிக்கும் காதலில் விரிசல் விழுகிறது. இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா - பிரதீப் ரங்கநாதன் இடையே மோதல் வெடிக்கிறது.
இந்த மோதலில் வெற்றி பெற்றது யார்? பிரதீப் ரங்கநாதன் - கீர்த்தி ஷெட்டி காதல் கை கூடியதா? எல்.ஐ.கே. செயலியின் அடுத்த கட்ட பரிமாணம் என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல காதல், நகைச்சுவை என கலாட்டாவான கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். அவரது எதார்த்தமான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எமோஷனல் காட்சிகளிலும் நன்கு தேறி விட்டார். மீண்டும் ஒரு வெற்றிக்கு தயாராகி விட்டார்.
எந்த பக்கம் பார்த்தாலும் அழகாக இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. ரீல்ஸ் மோகத்தில் சுற்றும் நவநாகரீக பெண்ணான அவர், திடீரென எதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் தந்தையாக பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சீமான் நடித்துள்ளார். அழுத்தமான அவரது கதாபாத்திரம் அரசியல்வாதி என்பதை தாண்டி நடிகராகவும் ரசிக்க செய்கிறது. எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிரட்டுகிறார். கீர்த்தி ஷெட்டியுடன் அவர் போனில் உரையாடும் காட்சிகள் கலகலப்புக்கு கியாரண்டி.
கவுரி கிஷன், ஆனந்தராஜ், யோகி பாபு ஆகியோரின் நடிப்பும் கவனம் பெற்றுள்ளது. வாலமீன் மாளவிகா மீண்டும் திரையில் தோன்றியது ரசிக்க வைக்கிறது.
ரவிவர்மன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. பாடல் காட்சிகள் கலக்கல். அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. தீமா தீமா பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்த்தாலும், புதுமையான காட்சிகள் அதை மறக்கடிக்க செய்கின்றன. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமோ...
பல்வேறு இடையூறுகளைத் தாண்டி இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கும் விக்னேஷ் சிவன், வழக்கம்போல புதுமையான கண்ணோட்டத்தில் ரசிக்கக் கூடிய கதையாக படைத்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.