லஞ்சம், ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அரசியல்வாதி ஆர்.வி.உதயகுமாரின் மகன் கல்லூரியில் ரவுடித்தனம் செய்கிறார். இந்த ரவுடித்தனத்தை கல்லூரி முன்னாள் மாணவரான லெனின் அடக்குகிறார். இதனால் இருவரிடையே பகை சூழ்கிறது. இதற்கிடையில் ஆர்.வி.உதயகுமார் மகள் அஸ்மினுக்கும், லெனினுக்கும் காதல் மலர்கிறது. அதேவேளை பழைய பகையை மனதில் கொண்டு லெனினை பழிவாங்க போலீஸ் அதிகாரி ஒருவர் துடிக்கிறார்.
இந்த சூழலில் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை முன்னெடுக்கிறார் ஆர்.வி.உதயகுமார். நிச்சயதார்த்தம் நடைபெற்ற நேரத்தில், லெனின் ஒரு பிரச்சினையில் சிக்கி வஞ்சம் தீர்க்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக் கொள்கிறார்.
அடுத்து என்ன ஆனது? காதலியை லெனின் கரம் பிடித்தாரா? போலீசிடம் அவர் சிக்க என்ன காரணம்? போலீசுக்கும் அவருக்கு என்ன பகை? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையாக நகருகிறது மீதி கதை.
கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில் நடக்கும் மோசடியை அம்பலப்படுத்துவது தொடங்கி, போராட்டக் குணத்தால் படம் முழுக்க கவரும் லெனின், காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார்.
அழகான கதாநாயகியாக வரும் அஸ்மின் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். கிளைமேக்சில் அவர் எடுக்கும் முடிவு திருப்பம். ஆர்.வி.உதயகுமாரின் அலட்டல் இல்லாத வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. அனுமோகன், பொன் பார்த்திபன் உள்ளிட்ட அனைவருமே படத்தின் பரபரப்புக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவும், கைலாஷ் மேனனின் இசையும் படத்துடன் ஒன்றச் செய்கிறது. அடுத்து என்ன? என்று நகரும் பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல் காட்சிகள் பலவீனம்.
கல்லூரி மாணவர்களுக்கிடையே நடக்கும் போட்டி பொறாமையாக கதையில் தொடங்கி, அரசியலை நகர்வுகளையும் கையாளும் வகையில் திரைக்கதையை வடிவமைத்து, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.